● என். கணபதி சுப்பிரமணியன், கொடுமுடி.
எனது பேரன் நிதின்கிருஷ்ணன் படிப்பு, எதிர்காலம் பற்றி விளக்கவும்.
உங்களுடைய கேள்வியை பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி அவர்களுக்கு அனுப்பி யுள்ளீர்கள். அலுவலகத்தில் எனக்கு அனுப்பி விட்டதால் நானே பதில் கூறுகிறேன். பேரன் அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசி, விருச்சிக லக்னம். 2012 மார்ச் மாதம் பிறந்த வன். 2019 மார்ச்சில் எட்டு வயது முடிந்து ஒன்பது வயது ஆரம்பம். ஆறு வயதுமுதல் புதன் தசை ஆரம்பம். புதன் 5-ல் நீசம். 2020 வரை ஏழரைச்சனி. படிப்பில் மந்தம், விளையாட்டில் ஆர்வம், அடம்பிடிப்பது, பெரியவர்களுக்கு தொல்லை கொடுப்பது, மறதி- மந்தப்போக்கு, டி.வி பார்ப்பதில் அக்கறை போன்ற பலன்- ஏழரைச்சனி முடியும்வரை. சனிக்கிழமைதோறும் 19 மிளகை சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி, அதனை நெய்யில் நனைத்து காலபைரவர் சந்நிதியில் தீபமேற்றி வரவும்- ஏழரைச்சனி முடியும்வரை! பள்ளி விடுமுறையில் கடலூர் அருகில் திருவந்திபுரம் சென்று ஹயக்ரீ வருக்கு விசேஷ பூஜை செய்யவும். (ஒருமுறை).
● திருமதி காவேரி, ஈரோடு.
கடந்த ஒரு மாத காலமாக கடுமை யான மூச்சுத்திணறல், அலர்ஜி, ஆஸ்து மாவால் அவஸ்தைப்படுகிறேன். நுரையீரல் சிறப்பு மருத்துவரிடம் சிகிச்சை பெறுகிறேன். எனக்கு ஆயுள் தீர்க்கமா? பரிகாரம் தேவையா? மகளின் இரண்டாவது திருமணம் பற்றிக் கேட்டதற்கு, சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு வரன் பார்க்கும்படி எழுதியிருந்தீர்கள். மகள் பெயரிலுள்ள மனையை விற்க செவலூர் பூமிநாதசுவாமி கோவிலை அணுகினோம். ராஜப்பா குருக்கள் பூமிப் பத்திர நகல் எடுத்து வந்து பூஜைசெய்யச் சொன்னார்.
ராஜப்பா குருக்கள் சொல்வது சரிதான். அத்துடன், அவரைத் தொடர்புகொண்டு மகளின் மறுமணத்துக்கு காமோகர்ஷண ஹோமம், பார்வதி சுயம்வரகலா ஹோமத்தில் புனர்விவாக மந்திரம் ஜெபம் செய்து, மகளுக்கும் உங்களுக்கும் கலச அபிஷேகம் செய்யவும். அங்கு சென்றதும், என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டால் என்னென்ன ஹோமம் என்பதை அவரிடமே சொல்கிறேன். தன்வந்திரி ஹோமம், நவகிரக ஹோமம், ஆயுஷ் ஹோமம் உள்பட பல ஹோமம் செய்யவேண்டும். மகளுக்கு ராகு தசை நடப்பதால் சூலினிதுர்க்கா ஹோமமும் செய்யவேண்டும்.
● எம். சுந்தரம், வத்தலக்குண்டு.
எனது திருமணம் தடைப்பட்டுக்கொண்டே போகிறது. ஏன்? ஜாதகத்தில் தோஷம் உள்ளதா? எப்போது திருமணம் நடைபெறும்?
பூரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, மிதுன லக்னம். லக்னத்திற்கு 2-ல் கேதுவும், 8-ல் சுக்கிரன், ராகு- சூரியன் இருப்பதும் நாகதோஷம், களஸ்திர தோஷம். 29 வயது முடிந்து 30 நடக்கிறது. நியாயமாக 35 வயதில்தான் இந்தமாதிரி தோஷ ஜாதகத்துக்கு திருமணம் நடக்கும். 30 வயது என்பது காலதாமதமல்ல! 7-ல் செவ்வாய், சனி சேர்க்கை என்பதால், காதல் திருமணம், கலப்புத் திருமணம் என்பது ஜோதிட விதி. ஆனால் குரு பார்வை இருப்பதால், அப்படி நடக்காது. என்றாலும், ஏற்கெனவே உங்கள் கிரக அமைப்புப்படி காதல் தோல்வி ஏற்பட்டிருக்கலாம். காரைக்குடி சுந்தரம் குருக்களைத் தொடர்புகொண்டு (செல்: 99942 74067) காமோகர்ஷண ஹோமமும், கந்தர்வராஜ ஹோமமும், சூலினிதுர்க்கா- திருஷ்டி துர்க்கா ஹோமமும், நவகிரகம், தன்வந்திரி, ஆயுஷ் ஹோமம் உள்பட 19-20 ஹோமமும் செய்து நீங்கள் கலச அபிஷேகம் செய்துகொள்ளுங்கள். நல்ல மனைவி, இன்பமான வாழ்க்கை, சிறப்பான வாரிசு, முன்னேற்றம் எல்லாம் உண்டாகும்.
● பொன்னையா ராஜா, திருச்சி-5.
ஜோதிடஞானிக்கு வணக்கம்! குரு தசை முடியப் போகும் காலத்தில் உடல்நிலை மிக மோசமாக தொல்லை கொடுக்கிறது. ரத்தம் ஏற்றவேண்டும் என்கிறார்கள். ஆபரேஷன் தேவை என்கிறார்கள். எனக்கு இரண்டிலும் விருப்பமில்லை. ஆயுள் எப்படி உள்ளது?
பூர நட்சத்திரம், சிம்ம ராசி, கும்ப லக்னம். ராசி, அம்சம், சுக்கிர தசை, இருப்பு எல்லாம் எழுதிய நீங்கள் பிறந்த தேதி எழுத மறந்துவிட்டீர்களா? அல்லது தேவையில்லை என்று கருதிவிட்டீர்களா? உங்கள் கிரக அமைப்பை வைத்து உங்கள் பிறந்த தேதியை பழைய பஞ்சாங் கத்தை வைத்து கணிக்க முடியும். ஆனால் பரீட்சைக்குப் போன மாணவன் பேனாவோ, பென்சிலோ கொண்டுபோகா விட்டால், அதன் முக்கியத்துவம் தெரியாமல் போய்விடும். அல்லது ரேஷன் கடைக்குப் பொருள் வாங்கப்போனவருக்கு ரேஷன் கார்டுகொண்டு போகாவிட்டால் எப்படி பொருட்கள் கொடுப்பார்கள்? பிறந்த தேதி, நேரம் உள்பட முழு விவரமும் இருந்தால்தான் பதில் தர இயலும். டாக்டர் அறிவுரைப்படி நடந்தால் 70 வயதைத் தாண்டலாம்.
● எல். பரமஹம்சன், சென்னை-34.
20-9-2013 "பாலஜோதிடம்' கேள்வி- பதில் பகுதியில் சனி தசை, சனி புக்தியில் மாரகம் ஏற்படும் என்று கூறியிருந் தீர்கள். இப்போது சனி தசை, சனி புக்தி பாதி முடிந்துள்ளது. 71 வயது. மாரகம் பற்றிக் கூறவும்.
சனி தசை, சனி புக்தி 27-10-2020 வரை நடக்கும். அதில் மாரகம் எப்போதும் வரலாம். ஆயுள் நீடிப்பதைப் பற்றி சந்தோஷப்படுவதைவிட்டு கவலைப்படு கிறீர்களே- வித்தியாசமாக இருக்கிறது. உங்களுக்காக ஒரு கதை சொல்கிறேன். ஒரு முஸ்லிம் வியாபாரி. வயதானவர். திருமண மாகாத, குடும்பம் இல்லாத தனிக்கட்டை. வெளியூர்களுக்குப்போய் ஜவுளி வியாபாரம் செய்கிறவர். ஒவ்வொரு முறையும் வெளியூருக்குப் போவதற்கு முன்பு உள்ளூர் பள்ளிவாசல் சென்று தொழுது, அங்குள்ள ஹஜ்ரத்திடம் உத்தரவு கேட்பது வழக்கம். அவர், "வியாபாரம் நடக்கும்- இவ்வளவு லாபம் கிடைக்கும். சுகமாக திரும்பி வருவீர்கள்' என்று அல்லாவிடம் கேட்டுச் சொல்வது வழக்கம். ஒருமுறை இறைவனிடமிருந்து, "வியாபாரி திரும்ப மாட்டான். ஆயுள் முடிந்துவிடும்' என்று பதில் வந்தது. ஹஸ்ரத் வியாபாரிடம் "கிரக நிலை சரியில்லை. கவனமாகப் போய் வாருங்கள்' என்றார். அதன்படியே ஒரு கிராமத்தில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கிவிழுந்தார். ஒரு முஸ்லிம் பெண் மணியும், அந்த அம்மாளின் மூன்று பெண் களும் காட்டுவேலைக்குப்போய் திரும் பிவந்தவர்கள் இதைக்கண்டு அவரை டாக் டரிடம் காண்பித்து மருத்துவம் பார்த்து, வீட்டில் ஓய்வெடுக்கச் செய்து உபசரித் தார்கள். அவர் திருமணமாகாத மூன்று பெண்களுக்கும் தன் செலவில் மஹர் (வரதட் சணை) கொடுத்து திருமணம் செய்துவைத்தார். அந்த மூன்று பெண்களும் நன்றிக்கடனாக தம் ஆயுளில் பத்து ஆண்டுகளை பெரிய வருக்குத் தருமாறு பிரார்த்தனை (துவா) செய்தார்கள். கடமைகளை முடித்த பெரியவர் உள்ளூர் திரும்பியதும், ஹஜ்ரத்துக்கு ஆச்சரியம்! அப்போதுதான், "இன்னும் முப்பது ஆண்டுகள் அவருக்கு ஆயுள் நீடித்துள்ளது' என்று உத்தரவு கிடைத்தது. இப்படி அவரவர் செய்யும் நற்செயல்களாலும், தானதருமங்களாலும், பிரார்த்தனை பலத்தாலும், மற்றவர்களின் வாழ்த்துகளாலும் ஆயுள் கூடும். புராணத்தில் மார்க்கண்டேயனுக்கு 16 வயது என்று விதி இருந்தாலும், அவனுடைய பூஜா பலத்தால் "என்றும் 16 வயது' என சிரஞ் சீவியாக வாழ்ந்தாக சொல்லப்படவில்லையா! பிறக்க வைத்த இறைவனுக்கு எப்போது இறக்கச் செய்யவேண்டுமென்று தெரியும். ஆகவே ஜோதிடரிடம் கேட்பதை விட்டு விட்டு இறைவனைக் கேளுங்கள்.
● வி. கார்த்திகேயன், ராசிபுரம்.
"அதிர்ஷ்டம்' பத்திரிகையிலிருந்து, "பாலஜோதிடம்' வரை ஜோதிட உலகில் சக்கரவர்த்தியாகத் திகழும் தாங்கள், ஜோதிட வகுப்புகள் நடத்தி இக்கலையை வளர்க்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
உங்கள் கேள்வி நியாயமானதுதான். அதேசமயம் எனது வயதும், ஓய்வில்லாத சூழ்நிலையும்தான் உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முடியாததற்குக் காரணம். இருந்தாலும் ராசிபலன் பகுதியில் நான் தரும் விளக்கமே ஜோதிடப் பாடம் மாதிரிதான்! பலரும் அதைப் படித்தே ஜோதிடராக மாறியிருக்கிறார்கள். என்றாலும் விரைவில் "பாலஜோதிட'த்திலேயே ஜோதிடப்பாடம் எழுத ஆர்வமாக இருக்கிறேன். நல்ல உதவியாளர் அமைந்தால் அந்தப் பணி எளிதாக ஈடேறும்.
● ரா. பாஸ்கரன், பெங்களூரு.
பல வருடங்களாக ஆய்க்குடி பாலசுப்ரமணிய சுவாமியை குலதெய்வமாக வழிபட்டு வருகிறோம். இப்போது திடீரென்று குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனது உறவினர் ஒருவர், உங்களைத் தொடர்புகொண்டு வழிகாட்டும்படி அறிவுறுத்தினார். எங்களுக்கு வழிகாட்டவும்.
குலதெய்வம் தெரியாதவர்கள் இஷ்டதெய்வத்தையே வழிபடலாம். சிவஞானபோதகம் என்ற நூலில் "யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி மாதொரு பாகனார் வந்தருளுவார்' என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் "எத்தெய்வத்தை வழிபட்டாலும் அது முக்கண் ஆதியை அடையும்' என்று சொல்லப்படுகிறது. இதுவரை நீங்கள் வழிபட்டுவந்த பாலசுப்ரமணியமே சிவனின் அம்சம்தான். ஆய்க்குடி முருகனையும் வழிபடலாம். சுவாமிமலை முருகனையும் வழிபடலாம். இதில் குழப்பமே கூடாது. அத்துடன் துவாக்குடியில் உள்ள சாந்தி என்ற பெண், குலதெய்வம் பற்றி குறிசொல்வதாகக் கேள்விப்பட்டேன். செல்: 94435 33173-ல் தொடர்புகொண்டு போகவும். ஏதாவது தகவல் அறியலாம்.
● என்.எஸ். ராமநாதன், மும்பை-400 081.
என்னுடைய இரண்டு பேரன்களின் படிப்பு, எதிர்காலம், ஆயுள் பற்றிய விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சித்தானந்த் மூல நட்சத்திரம், தனுசு ராசி. நடப்பு வயது 14. 2020 வரை ஏழரைச்சனி. நான்கு வயதுமுதல் சுக்கிர தசை. இது குட்டிச்சுக்கிரன். அதனால் ஆரோக்கியத்தில் குறை, படிப்பில் மந்தம், ஞாபக மறதி காணப்படும். சனிக்கிழமைதோறும் 15 மிளகை ஒரு சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி, அதை நெய்யில் நனைத்து காலபைரவர் சந்நிதியில் தீபமேற்றவும்- ஏழரைச்சனி முடியும்வரை. அதிதி தத்துவுக்கு கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி. 2020 வரை அவனுக்கும் அட்டமச்சனி. 2019 ஜூலையில் 11 வயது முடிந்து 12 ஆரம்பம். சந்திர தசை முடிந்து செவ்வாய் தசை நடப்பு. லக்னாதிபதி தசை. (விருச்சிக லக்னம்). இருவருக்கும் ஆயுள் தீர்க்கம். இருவருக்கும் சனி தசை. ஒருவனுக்கு ஜென்மச்சனி. மற்றவனுக்கு அட்டமச்சனி. இளையவனுக்காக 12 மிளகை சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி காலபைரவர் சந்நிதியில் தீபமேற்றவும். அத்துடன் கோவில் அல்லது வீட்டில் மேதா தட்சிணாமூர்த்தி ஹோமம், நீலுசரசுவதி ஹோமம், வாக்வாதினி ஹோமம், ஹயக்ரீவர் ஹோமம், நவகிரக ஹோமம், சனி சாந்தி ஹோமம், ஆயுஷ் ஹோமம் ஆகியவற்றை இரண்டு பேரன்களுக்கும் செய்து கலச அபிஷேகம் செய்ய வேண்டும். இருவருக்கும் ஹயக்ரீவர் மந்திரத்தை உபதேசம் செய்து, தினசரி ஜெபம் செய்யும்படி ஏற்பாடு செய்யுங்கள். 2020 சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு இருவருக்கும் கல்வி முன்னேற்றம், தொடர்கல்வி, ஆயுள், ஆரோக்கியம் எல்லாம் தெளிவாக அமையும். மும்பையில் மேற்படி ஹோமம் செய்ய சரியானவர்கள் இல்லையென்றால், காரைக்குடியில் சுந்தரம் குருக்களைத் தொடர்புகொண்டு 19 வகையான ஹோமம் செய்யலாம். (செல்: 99942 74067). பேரன்களுக்கும், பெற்றவர்களுக்கும் புதுஆடை உடுத்தி, கலச அபிஷேகம் செய்யவேண்டும்.